டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு - போலீஸ் விசாரணை


டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 Sept 2019 3:45 AM IST (Updated: 12 Sept 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5½ பவுன் நகைகள் திருடு போனது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி சாரம் பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் (வயது 53). இவர் புதுவை கடற்கரை சாலை பழைய வடிசாராய ஆலை அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகி றார். இவர் வீட்டில் மனைவி, மகன், மருமகள் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் இவருடைய வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் இருந்த பீரோவில் இருந்த கைசெயின் (24 கிராம்), தங்க சங்கிலி (16 கிராம்), மோதிரம் (4 கிராம்) ஆகியவை நேற்று முன்தினம் மாயமாகி போயிருந்தது. மேலும் அங்கு வேறு சில நகைகள், ரொக்கப்பணமும் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அதே சமயத்தில் பீரோ பூட்டு உடைக்கப்படாமல் நகைகள் மாயமாகியிருந்தது.

இதுதொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதேபோல் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணிடமும் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின்போது வீட்டிற்கு முகமது அபுபக்கர் உறவினர் சிலர் வந்து சென்றது தெரியவந்தது.

இந்த நகை திருட்டு குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story