புதுச்சேரியில் பலத்த காற்றுடன் மழை, சாலையோரம் கட்டப்பட்டிருந்த பேனர் விழுந்து 10 பேர் காயம்
புதுச்சேரியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சாலையோரம் கட்டப்பட்டிருந்த பேனர் கழன்று விழுந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
புதுச்சேரி,
வெப்பச்சலனம், காரைக் கால் அருகே வளிமண்டல கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்றும் (புதன்கிழமை), இன்றும் (வியாழக்கிழமை) மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று காலை வழக்கம் போல வெயில் கொளுத்தியது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் பலத்த காற்றுடன், மழை பெய்யத்தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் மின்தடை செய்யப் பட்டது.
இந்த காற்று மற்றும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். நகரின் தாழ்வான பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள கம்பன் கழகம் நூலகம் அருகே திருமண வாழ்த்து தெரிவித்து பிரம்மாண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பலத்த காற்று வீசியதால் அந்த பேனர் சரிந்து அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகரில் புஸ்சி வீதி, சின்னசுப்புராயப்பிள்ளை வீதி, நேரு வீதி, காந்தி வீதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றது. பலத்த காற்று வீசியதால் புஸ்சி வீதி, தெரேஸ் வீதிகளில் சாலையோரம் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. அதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறை, தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
Related Tags :
Next Story