அருப்புக்கோட்டை அருகே, மின்னல் தாக்கி வாலிபர் சாவு-அண்ணன் காயம்


அருப்புக்கோட்டை அருகே, மின்னல் தாக்கி வாலிபர் சாவு-அண்ணன் காயம்
x
தினத்தந்தி 12 Sept 2019 3:45 AM IST (Updated: 12 Sept 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்ற சகோதரர்கள் மீது மின்னல் தாக்கியதில், தம்பி பரிதாபமாக இறந்தார். அண்ணன் காயத்துடன் உயிர் தப்பினார்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் வினோத்பாண்டி (வயது 36), பிரதீப் (26).

இதில் வினோத்பாண்டி வெல்டிங் தொழில் செய்து வருகிறார். தம்பி பிரதீப் ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை அண்ணன், தம்பி இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலவநத்தத்தில் இருந்து குல்லுசந்தை வழியாக விருதுநகருக்கு சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை பிரதீப் ஓட்டி சென்றார்.

அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உடல் முழுவதும் கருகிய பிரதீப் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

காயம் அடைந்த வினோத்பாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பரிதாப சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story