தலையாரியை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை போலீஸ் தேடுகிறது


தலையாரியை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 12 Sept 2019 4:00 AM IST (Updated: 12 Sept 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூர் அருகே தலையாரியை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில், மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரனுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

உடனே அவரது தலைமையில், வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு ஆகியோர் காரில் அங்கு விரைந்து சென்றனர். அந்த காரின் முன்பாக தலையாரி பாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

செய்துங்கநல்லூர்-வசவப்பபுரம் ரோட்டில் சென்றபோது, எதிரே ஆற்று மணலை கடத்திக்கொண்டு ஒரு மினி லாரி வந்தது. அந்த மினிலாரியை பாலகிருஷ்ணன் கை சைகை காட்டி நிறுத்த முயன்றார். ஆனால், மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை லாரி ஏற்றி கொல்ல முயன்றனர். அப்போது பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதியது.

உடனே, அவர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனவே, மினி லாரியில் இருந்தவர்கள் அவரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

தொடர்ந்து மற்றொரு மினி லாரியில் ஆற்று மணலை கடத்தி வந்தவர்களும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். சிறிது நேரத்தில் அந்த பகுதிக்கு தாசில்தார் தலைமையிலான அதிகாரிகளும் வந்தனர். தலையாரியை லாரி ஏற்றி கொல்ல முயன்ற மணல் கடத்தல் கும்பல் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இதுதொடர்பாக செய்துங்கநல்லூர் நம்பிசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மாசானம் மகன் பெருமாள் (வயது 28), முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த ராமர் மகன் மாணிக்கராஜ் (22) ஆகிய 2 பேரை இரவில் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான முத்தாலங்குறிச்சி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ஈனமுத்து மகன் மூக்காண்டி என்ற பூல்பாண்டி, அவருடைய தம்பி நல்லதம்பி, முத்தாலங்குறிச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைகண்ணு மகன் கண்ணன், இசக்கி மகன் முத்து, அவருடைய தம்பி முண்டசாமி என்ற பரமசிவன் ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story