ஏரல் அருகே, தாமிரபரணி ஆறு வறண்டதால், வெளியே தெரியும் பழங்கால படித்துறைகள் - அகழாய்வு செய்ய கோரிக்கை


ஏரல் அருகே, தாமிரபரணி ஆறு வறண்டதால், வெளியே தெரியும் பழங்கால படித்துறைகள் - அகழாய்வு செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 12 Sept 2019 4:30 AM IST (Updated: 12 Sept 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே தாமிரபரணி ஆறு வறண்டதால், வெளியே தெரியும் பழங்கால படித்துறைகளை அகழாய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஏரல், 

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி நதியானது ஆத்தூர் அருகே புன்னக்காயலில் கடலில் சங்கமிக்கிறது. வற்றாத ஜீவநதியாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு தண்ணீர் செல்லாத வகையில், ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, தண்ணீர் தேக்கப்படுகிறது.

அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்திருப்பேரை அருகே குரங்கணி, ஏரல் அருகே வாழவல்லான் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆத்தூரை அடுத்த முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.

தற்போது கடும் வறட்சி நிலவுவதாலும், அணைகளில் இருந்து திறந்து விடப்படும் குறைந்தளவு தண்ணீரும் பாசன கால்வாய்களில் திருப்பி விடப்படுவதாலும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி, தண்ணீர் வரவில்லை. மேலும் புன்னக்காயலில் இருந்து கடல் நீரும் எதிர் திசையில் வராதவாறு, முக்காணியில் தடுப்பணை உள்ளது. இதனால் வாழவல்லான்-முக்காணி ஆகிய தடுப்பணைகளுக்கு இடையில் தாமிரபரணி ஆறு வறண்டு காணப்படுகிறது.

அந்த இடைப்பட்ட பகுதியில் ஏரல் அருகே உமரிக்காடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் பழங்கால படித்துறைகள், சுவர்கள், கட்டிட இடிபாடுகள் போன்றவை சிதிலம் அடைந்த நிலையில் வெளியே தெரிகிறது. அவற்றை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ஏரல் அருகே உள்ள கொற்கை தலைநகராகவும், துறைமுகமாவும் சிறப்புற்று விளங்கியது. இங்கு கிடைக்கப்பெற்ற முத்துக்களும் சிறப்பு வாய்ந்தவை. அப்போது தாமிரபரணி ஆறு, கொற்கை கடலில் சங்கமித்தது. நாளடைவில் கடல் உள்வாங்கி, புன்னக்காயல் வரையிலும் சென்றது.

தற்போது உமரிக்காடு ஆற்றுப்படுகையில் தென்படும் படித்துறைகள் போன்றே ஆதிச்சநல்லூர் பாண்டியராஜா கோவில் அருகிலும் பழமைவாய்ந்த படித்துறைகள் உள்ளன. எனவே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழாய்வு செய்தால், பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு பறைசாற்றுவதாக அமையும் என்று தெரிவித்தனர்.

Next Story