கோடை காலம் முடிந்த பின்னரும் நெல்லையை வாட்டிவதைக்கும் வெயில் - பொதுமக்கள் கடும் அவதி
கோடை காலம் முடிந்த பின்னரும் நெல்லையை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. குற்றாலத்தில் சாரல் மழை பெய்வதால் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளத்திற்கு கிழக்கே மாறாந்தையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
நெல்லையில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் 101.3 டிகிரி வெயில் அடித்தது. அதாவது கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கும் வெயில் போல் தற்போது வெயில் அடித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.
நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் அனல் காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லமுடியாத அளவிற்கு கடும் அவதிக்கு உள்ளாகினர். மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். துணியால் தலை, முகப்பகுதியை மூடிக்கொண்டு வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர். சாலையில் நடந்து சென்ற பெண்கள் பலர் குடைபிடித்தபடி சென்றனர். கோடை காலம் முடிந்த பின்னரும் 100 டிகிரிக்கு வெயில் அடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள், இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றின் விற்பனை அதிக அளவில் நடந்தது.
Related Tags :
Next Story