புனித பயணம் முடிந்து 422 ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் சென்னை வந்தது


புனித பயணம் முடிந்து 422 ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம்  சென்னை வந்தது
x
தினத்தந்தி 12 Sep 2019 10:45 PM GMT (Updated: 12 Sep 2019 5:00 PM GMT)

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 422 பயணிகளுடன் முதல் விமானம் சென்னை வந்தது.

ஆலந்தூர்,

உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4,627 பேர் புனித ஹஜ் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து முதல் விமானம் கடந்த ஜூலை மாதம் சவுதிஅரேபியா ஜித்தா நகருக்கு புறப்பட்டு சென்றது. புனித ஹஜ் யாத்திரையை முடித்துக்கொண்டு மதினாவில் இருந்து ஒரு குழந்தை, 213 பெண்கள் உள்பட 422 பேருடன் முதல் விமானம் நேற்று அதிகாலை சென்னை திரும்பி வந்தது.

சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் சால்வை அணிவித்து வரவேற்றார். தமிழக சிறுபான்மை நலத்துறை செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் முகமது நசிமுத்தின் ஆகியோரும் வரவேற்றனர். அப்போது புனித ஹஜ் பயணம் முடித்துக்கொண்டு வந்தவர்கள் மதினாவில் விடுதிகள் சரியாக அமைக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

பின்னர் தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை முடித்துக்கொண்டு ஹாஜிகள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். 15-ந்தேதி வரை தினமும் விமானம் மூலம் திரும்புவார்கள். தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4,627 பேர் சென்றார்கள். இதில் 5 பேர் உடல் நலக்குறைவால் புனித யாத்திரையின் போது இறந்துவிட்டார்கள்.

புனித யாத்திரை சென்ற 22 பேர் உடல்நலம் குன்றியவர்கள். அவர்கள் சிறப்பு அனுமதி பெற்று சென்னைக்கு திரும்பி விட்டார்கள். மீதமுள்ள 4,600 பேர் புனித பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புகின்றனர். தமிழக அரசு சார்பில் ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக ரூ.6 கோடி மானியமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி வழங்கினார்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக 881 பேர் கூடுதலாக செல்ல முதல்-அமைச்சர் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று தந்தார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமானவர்கள் சென்றனர். கடந்த ஆண்டு ரூ.16,000 மானியமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகமானவர்கள் சென்றதால் ரூ.13,637 மானியமாக வழங்கப்பட்டது. முதல்-அமைச்சரை சந்தித்து கூடுதலாக மானியம் பெறுவதற்கு முயற்சி செய்வோம்.

மதினாவில் ஏர்இந்தியா விமான தாமதம், அறைகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று புனித ஹஜ் பயணம் சென்று வந்தவர்கள் புகார் தெரிவித்தனர். இதுபற்றி மத்திய அரசு மூலமாக சவுதி அரேபிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story