ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நோயாளிகள் அவதி
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளுக்கு 2 ஆயிரம் படுக்கை வசதி உள்ளது. இந்த மருத்துவமனையில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமானவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர தினமும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான புறநோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு அவசர சிகிச்சை பிரிவு முன்பாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை தவிர மருத்துவமனை வளாகத்தில் எங்கும் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கட்டுப்பாட்டை மீறி மருத்துவமனையின் வளாகம் முழுவதும் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவமனை வளாகத்தில் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக பெண்கள் மகப்பேறு வார்டு, புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் முன்பாக ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மருத்துவமனையின் வளாகத்திற்குள் குறுக்கும்நெடுக்குமாக மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுவதால், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story