பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதம் திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை


பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதம் திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 5:47 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணைப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 526 கிராம ஊராட்சிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, இருப்பு மற்றும் உபயோகப்படுத்துதல் போன்றவை கண்டறியப்பட்டால் ஊராட்சிகள் மூலம் கீழ்க்கண்டவாறு அபராதங்களை விதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைத்தல், வினியோகித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல் போன்றவற்றிற்கு முதல்முறை அபராத தொகை ரூ.25 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.50 ஆயிரமும், மூன்றாவது முறை ரூ.ஒரு லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

பிளாஸ்டிக் பொருட்களை துணிக்கடை, பல்பொருள் துணிக்கடை, பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் போன்ற பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்துதல் மற்றும் வினியோகித்தலுக்கு முதல்முறை அபராதத்தொகை ரூ.10 ஆயிரம், இரண்டாவது முறை ரூ.15 ஆயிரம், 3-வது முறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் முதல் முறை ரூ.1,000, இரண்டாவது முறை ரூ.2,000 மூன்றாவது முறை ரூ.5 ஆயிரமும் அபராதத்தொகை வசூலிக்கப்படும்.

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சிறுவியாபாரிகள் பயன்படுத்துதல் மற்றும் வினியோகம் செய்தால் முதல் முறை ரூ.100 அபராதமும், இரண்டாவது முறை ரூ.200-ம், மூன்றாவது முறை ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Next Story