கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.1 லட்சம் விரைவில் செலுத்தப்படும்


கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.1 லட்சம் விரைவில் செலுத்தப்படும்
x
தினத்தந்தி 12 Sep 2019 11:30 PM GMT (Updated: 12 Sep 2019 6:24 PM GMT)

கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.1 லட்சம் விரைவில் செலுத்தப்படும் என முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

சிக்கமகளூரு, 

கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.1 லட்சம் விரைவில் செலுத்தப்படும் என முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

எடியூரப்பா சாமி தரிசனம்

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டரில் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா மெனசே கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு மைதானத்தில் வந்திறங்கினார். பின்னர் அவர் காரில் அங்கிருந்து சிருங்கேரியில் உள்ள பிரசித்தி பெற்ற சாரதம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

அப்போது அவருடன் ஷோபா எம்.பி., மாநில சுற்றுலா துறை மற்றும் கன்னட கலாசார துறை மந்திரி சி.டி.ரவி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் எடியூரப்பா சாரதம்மன் பீடத்தில் உள்ள நந்தவனத்துக்கு சென்று பாரதீய தீர்த்த சங்கராச்சாரியார், இளைய மடாதிபதி விதுசேகரா சுவாமி ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

வங்கி கணக்கில் தலா ரூ.1 லட்சம் செலுத்தப்படும்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

கர்நாடகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்தது. இதனால் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதைதொடர்ந்து கர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. மழை-வெள்ளத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மழை வேண்டாம் என கடவுளை வேண்டி வருகிறேன். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

மழை-வெள்ளத்தால் முற்றிலும் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வீடுகளை இழந்தவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக தலா ரூ.1 லட்சம் நிதி செலுத்தப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பணிகளை இந்த அரசு செய்து வருகிறது. விரைவில் மத்திய அரசு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சொத்துகளை பாதுகாக்க போராட்டம்

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது இதுபோன்ற செயல்களால் தான் எதிர்க்கட்சிகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயலும். அதை தான் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் செய்து வருகின்றன.

அதாவது மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்பதை காண்பிக்கவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் டி.கே.சிவக்குமாரின் சொத்துகளை பாதுகாக்க தான் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

யானைகளிடம் ஆசி பெற்றார்

பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா, சாரதம்மன் கோவிலில் இருந்து வெளியே வரும் போது, கோவிலில் உள்ள 2 யானைகளிடம் ஆசி பெற்றார்.

அதையடுத்து எடியூரப்பா சிருங்கேரியில் இருந்து கொப்பா தாலுகா கவுரிகத்தே கிராமத்தில் உள்ள வினய் குருஜி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு அவர் வினய் குருஜியை சந்தித்து ஆசி பெற்றார். அதைதொடர்ந்து எடியூரப்பா ஹெலிகாப்டரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். எடியூரப்பா வருகையையொட்டி சிருங்கேரி, கொப்பா தாலுகாக்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story