சகோதரரின் மனைவியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை ; தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சகோதரரின் மனைவியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை ; தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 PM GMT (Updated: 12 Sep 2019 6:28 PM GMT)

சகோதரரின் மனைவியை வெட்டி கொலை செய்தது தொடர்பான வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள உள்ள கருபையனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி(வயது 55). தொழிலாளியான இவர் பெங்களூருவில் தங்கி வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி(53). இவர் பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தார். சின்னசாமிக்கு சொந்தமான நிலம் கருப்பையனஅள்ளியில் இருந்தது. அந்த நிலத்தை அவருடைய அண்ணன் சின்னகுட்டியும், தம்பி மகாலிங்கமும் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டில் விடுமாறு சின்னசாமி கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர்களிடையே விரோதம் ஏற்பட்டு உள்ளது. சின்னசாமி நிலத்தை கேட்பதற்கு அவருடைய மனைவி லட்சுமிதான் காரணம் என்று முடிவு செய்த சின்னகுட்டி, மகாலிங்கம் ஆகியோருக்கு லட்சுமி மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பாலக்கோடு அருகே சேங்கன்மேடு பகுதியில் லட்சுமி வெட்டி கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் பிணமாக கிடந்தார்.

இதுதொடர்பாக பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்விரோதம் காரணமாக சின்னகுட்டி, மகாலிங்கம் ஆகியோர் தங்கள் சகோதரரின் மனைவியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு உறுதியானதால் சின்னகுட்டி, மகாலிங்கம் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், குற்றத்தை மறைத்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி பரமராஜ் தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

Next Story