திண்டுக்கல் அருகே, பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி,
மதுரை மாவட்டம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் யுவராணி (வயது 53). இவர் கடந்த 9-ந் தேதி திண்டுக்கல் அருகே கொட்டபட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் யுவராணியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து யுவராணி திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மா.மூ கோவிலூர் குளிப்பட்டி அருகே தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், வேல்முருகன், அழகுபாண்டி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் விரட்டி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஷேக்பரீத் (22) அசனாத்புரத்தை சேர்ந்த மைதீன் (24) என்பதும், கொட்டப்பட்டி சாலையில் நடந்து சென்ற யுவராணியிடம் நகையை பறித்துச் சென்றதும், வத்தலக் குண்டு பைபாஸ் சாலை குட்டியபட்டி அருகே ஆட்டோ டிரைவர் கலையரசனிடம் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் பாலகிருஷ்ணாபுரம், அஞ்சலி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தகவலும் வெளியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகை, ஒரு செல்போன், கத்தி மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story