சாலை விபத்துகளை தவிர்க்க அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது தொடர் நடவடிக்கை - போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி. அறிவுரை
சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் அசுர வேகத்தில் பயணம் செய்யும் வாகனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி. அறிவுரை வழங்கியுள்ளார்.
தேனி,
தேனி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீஸ் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேகத் தடுப்புகள் அமைத்தல், வேகத்தடைகள் அமைத்தல் போன்ற பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் விபத்துகளும், அதன் மூலம் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
போலீஸ் டி.ஐ.ஜி. பல்வேறு அறிவுரைகள் வழங்கி உள்ளார். இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீதும், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை தடுக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் அதே நேரத்தில், அசுர வேகத்திலும், அதிக பாரம் ஏற்றிக் கொண்டும் செல்லும் சரக்கு வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்து அபாயம் நிறைந்த சாலைகளில் வேகத்தை கட்டுப்படுத்த போதிய அளவில் சாலை தடுப்புகள் அமைக்க வேண்டும். குறிப்பாக லோயர்கேம்ப் முதல் உத்தமபாளையம் வரையுள்ள பகுதிகளில் அசுர வேக பயணத்தை தடுக்க சாலை தடுப்புகள் போதிய அளவில் வைக்க வேண்டும்.
சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டும். உயிர் பலியை ஏற்படுத்திய விபத்து சம்பவங்கள் அசுர வேக பயணத்தால் நடந்ததாக தெரிய வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதிக்கான போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன் தேனி மாவட்டத்துக்கான விபத்து தடுப்பு பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டு உள்ளார். 3 நாட்களுக்கு ஒரு முறை மாவட்டத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பணிகள், விதிமீறல் வழக்குகள் விவரம் போன்றவை திண்டுக்கல்லில் இருந்தபடி டி.ஐ.ஜி.யால் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Related Tags :
Next Story