கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி குறித்து சோனியாகாந்தியுடன் விவாதிப்பேன்


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி குறித்து சோனியாகாந்தியுடன் விவாதிப்பேன்
x
தினத்தந்தி 13 Sept 2019 4:30 AM IST (Updated: 13 Sept 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி குறித்து சோனியாகாந்தியுடன் விவாதிப்பேன் என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி குறித்து சோனியாகாந்தியுடன் விவாதிப்பேன் என்று தேவேகவுடா கூறினார்.

புதிய இணையதளம் தொடக்கம்

ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் புதிய இணையதள பக்கம் தொடக்க விழா பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்துகொண்டு இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

எங்கள் கட்சிக்கு அதிகாரப்பூர்வமான இணையதளம் இன்று (அதாவது நேற்று) தொடங்கப்பட்டு உள்ளது. இது எங்கள் கட்சியின் பிரசாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். கட்சியின் கொள்கைகள், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து இந்த இணையதள பக்கம் மூலம் மக்களுக்கு தெரிவிக்க முயற்சி செய்வோம்.

இடைத்தேர்தல்

இந்த இணையதள பக்கத்தை நிர்வகிக்கும் பணியை எங்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு கவனித்துக் கொள்வார். கட்சியின் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தொண்டர்கள் இந்த இணையதள பக்கத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். சமூகவலைதளத்தை பயன்படுத்துவதில் நாங்கள் சற்று பின்னோக்கி இருந்தோம். ஆனால் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளோம்.

இந்த இணையதள பக்கத்தை நிர்வகிக்கும் பணியில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமனம் செய்துள்ளோம். கட்சியை பலப்படுத்த இது பயனுள்ளதாக இருக்கும். நான் இன்று (நேற்று) உன்சூருக்கு செல்கிறேன். அந்த பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை அழைத்து இடைத்தேர்தல் குறித்து பேசுவேன்.

போட்டியிட மாட்டார்கள்

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பதிலாக நான் நாடாளுமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் கூறினர். ஒரு துடிப்பான இளைஞரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறேன். நான் இங்கேயே இருந்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன்.

குமாரசாமி கே.ஆர்.பேட்டைக்கு சென்றுள்ளார். நானும் அங்கு செல்ல உள்ளேன். உள்ளூர் நிர்வாகிகள் யாரை கை காட்டுகிறார்களோ அவரையே வேட்பாளராக அறிவிப்போம். கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் எனது குடும்பத்தினர் போட்டியிட மாட்டார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் 17 தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்பது இல்லை. இதற்கு முன்பு நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தோம். எங்கள் வேட்பாளர்களை காங்கிரசார் அழைத்து சென்றனர்.

முயற்சி வெற்றி பெறவில்லை

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணியை தொடருவது குறித்து அக்கட்சியின் அகில இந்திய தலைவி சோனியா காந்தி என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை. இதுபற்றி அவருடன் விவாதிப்பேன். எங்கள் பலத்தை முழுமையாக பயன்படுத்த முயற்சி செய்வோம்.

இனி எங்கள் கட்சியை பா.ஜனதாவின் ‘பி டீம்‘ என்று யாரும் அழைக்க முடியாது. இவ்வளவு நாட்கள் இத்தகைய விமர்சனத்தை நான் சகித்துக் கொண்டு வந்தேன். இனி இத்தகைய விமர்சனம் எடுபடாது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரசார் எவ்வளவோ முயற்சி செய்தனர். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவு

அக்கட்சி வெற்றி பெற்ற 130 தொகுதியில் இருந்து 78 தொகுதியாக குறைந்தது. கூட்டணியை தொடருவது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம். எங்கள் கட்சிக்கு சுயமரியாதை, பலம், கடவுள் ஆசி உள்ளது. எங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்த தேவையான முயற்சியில் ஈடுபடுவோம். அதற்கான ஆயுட்காலத்தை இறைவன் எனக்கு கொடுத்துள்ளார்.

நீங்கள் (ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.) வயதில் என்னைவிட சிறியவர். எனக்கு 86 வயது. எங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது உங்களை அழைத்து விருந்து கொடுப்போம். டி.கே.சிவக்குமார் கைதை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். டி.கே.சிவக்குமாருக்கு எங்களின் ஆதரவு உண்டு. டி.கே.சிவக்குமாரின் தாயாரை குமாரசாமி நேரில் சந்தித்து அவருக்கு தைரியம் கூறினார்.

கோபாலய்யா மிரட்டுகிறார்

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் கட்சி நிர்வாகிகளை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கோபாலய்யா மிரட்டுகிறார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். எங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story