டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் மகள் ஆஜர் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் மகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.
பெங்களூரு,
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் மகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பணம் சிக்கியது
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ள முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.
இதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறையை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டதை அடுத்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை ரத்து செய்ய கோரிய டி.கே.சிவக்குமாரின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.
தொடர்ந்து விசாரணை
இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் விசாரணை நடத்திய பிறகு கடந்த 3-ந் தேதி அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் தற்போது கோர்ட்டு உத்தரவுப்படி 13-ந் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறையின் காவலில் உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவர்களை அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை 12-ந் தேதி(நேற்று) நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. அதன்படி ஐஸ்வர்யா நேற்று காலை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை வரை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
கோர்ட்டில் ஆஜர்
ஐஸ்வர்யாவின் வங்கி கணக்கில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.20 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது குறித்தும், ரூ.100 கோடிக்கும் அதிகமான பணம் வங்கி கணக்கிற்கு வந்தது குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே டி.கே.சிவக்குமாரின் காவல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதால், அவரை போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதும் விசாரணை நடத்தப்படுகிறது.
Related Tags :
Next Story