கோவில்பட்டியில் ஓடையை ஆக்கிரமித்து இருந்த 12 கடைகள் இடித்து அகற்றம்
கோவில்பட்டியில் ஓடையை ஆக்கிரமித்து இருந்த 12 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ஓடையை ஆக்கிரமித்து இருந்த 12 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
ஓடை ஆக்கிரமிப்பு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் நகரில் மழைநீர் வழிந்தோட முடியாமல், கழிவுநீருடன் கலந்து சாலையில் தேங்குகிறது. எனவே ஓடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று ஓடை ஆக்கிரமிப்பு மீட்பு குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோவில்பட்டி நகரில் சுமார் ரூ.7 கோடி செலவில் நாற்கர சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சில கடைக்காரர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். எனினும் கடந்த மாதம் 26-ந்தேதி ஓடையை ஆக்கிரமித்து இருந்த 13 கடைகளை இடித்து அகற்றினர்.
12 கடைகள் அகற்றம்
தொடர்ந்து 2-வது கட்டமாக ஓடையை ஆக்கிரமித்து இருந்த 12 கடைகளை காலி செய்யுமாறு கடைக்காரர்களுக்கு வருவாய் துறை சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. இதையடுத்து கடைக்காரர்கள் தங்களது கடைகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். நேற்று காலை 6.30 மணியளவில் 12 கடைகளையும் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
இதையொட்டி அங்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு), சுகாதேவி (நாலாட்டின்புத்தூர்) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியை கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார்கள் மணிகண்டன், மல்லிகா, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் மந்திரசூடாமணி, அபிராமசுந்தரி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை டிராக்டர்களில் ஏற்றி உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். மதியம் 12.30 மணியளவில் 12 கடைகளும் அகற்றப்பட்டன. பின்னர் ஓடையில் இருந்த கழிவுநீர், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும் ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள 106 கடைகளையும் விரைவில் அகற்றுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story