நெல்லை அருகே பயங்கரம்: கோழிப்பண்ணை அதிபர் சரமாரி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லை அருகே கோழிப்பண்ணை அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்,
நெல்லை அருகே கோழிப்பண்ணை அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோழிப்பண்ணை அதிபர்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரத்தை அடுத்த நாணல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் இசக்கிபாண்டி (வயது 27). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். மேலும் அவர் மாடுகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.
இவர் நேற்று மாலையில் வல்லநாட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வெட்டிக் கொலை
நெல்லை அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை அடுத்த அகரம் விலக்கு அருகில் வந்தபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மறைந்து இருந்த மர்மநபர்கள் திடீரென்று இசக்கிபாண்டியை வழிமறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிபாண்டி அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் இசக்கிபாண்டியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விரைந்தனர்
நெல்லை-தூத்துக்குடி நாற்கரசாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
கொலை நடந்த இடத்தை மோப்ப நாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். கொலை செய்யப்பட்ட இசக்கிபாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இசக்கிபாண்டியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் குவிப்பு
நெல்லை-தூத்துக்குடி நாற்கரசாலையில் இசக்கிபாண்டி கொலை செய்யப்பட்டதால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாற்கரசாலையின் மற்றொரு பாதை வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கொலை செய்யப்பட்ட இசக்கிபாண்டியின் உடலை பார்த்து, அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இசக்கிபாண்டிக்கு ஒரு அக்காள், ஒரு தங்கை உள்ளனர். அக்காளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இசக்கிபாண்டியின் மீது எந்த வழக்கும் கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர். எனவே எதற்காக அவரை மர்மநபர்கள் கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வல்லநாடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story