மாவட்ட செய்திகள்

நெல்லையில் மாற்று இடம் வழங்கக்கோரிடவுன் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு - உண்ணாவிரதம் + "||" + Provide alternative space in Nellai Town Market traders bandh - fasting

நெல்லையில் மாற்று இடம் வழங்கக்கோரிடவுன் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு - உண்ணாவிரதம்

நெல்லையில் மாற்று இடம் வழங்கக்கோரிடவுன் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு - உண்ணாவிரதம்
மாற்று இடம் வழங்கக்கோரி நெல்லை டவுன் மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, 

மாற்று இடம் வழங்கக்கோரி நெல்லை டவுன் மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காய்கறி மார்க்கெட்

நெல்லை டவுனில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டில் விற்பனைக்காக தினமும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. உள்ளூர் விற்பனைக்கு இந்த மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.

ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வந்து செல்வதால் மார்க்கெட் தினமும் காலை முதல் மாலை வரை பரபரப்பாக காணப்படும். மேலும் நகரின் மையப்பகுதியில் இருப்பதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சுமார் ரூ.10¾ கோடியில் இந்த மார்க்கெட் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

உண்ணாவிரதம்

இதையொட்டி மார்க்கெட்டில் உள்ள கடைகளை நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்கனவே கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கடைகளை அடைத்து விட்டு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க தலைவர் நாராயணன், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் செல்வராஜ், வியாபாரிகள் சங்க நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

பொருட்காட்சி திடல்

நாங்கள் நெல்லை டவுன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட்டில் 50 ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருகிறோம். இந்த மார்க்கெட்டை நம்பி சுமார் 1,000 குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக எங்கள் கடையை காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நாளை மறுநாளைக்குள் காலி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திடீரென்று காலி செய்ய கூறினால் என்ன செய்வது?

எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அதில் எங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். வரவு-செலவு கணக்கு இருப்பதால், கடையை காலி செய்ய வருகிற பொங்கல் பண்டிகை வரை அவகாசம் கொடுக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் கடைகளில் எங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஏற்கனவே மனு கொடுத்தோம். அவர், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறினார். இதுவரை எங்களிடம் எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கள் கோரிக்கைகளை மாநகராட்சி ஏற்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்து முன்னணி ஆதரவு

உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டு இருந்தபோது இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறும்போது, “நெல்லையப்பர் கோவிலையொட்டி இந்த மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டும்போது அதிக ஆழம் தோண்ட வேண்டியது இருக்கும். இதனால் மிகவும் பழமையான நெல்லையப்பர் கோவில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக மார்க்கெட்டில் வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடை நடத்த மாற்று இடம் ஒதுக்க வேண்டும்” என்றார்.

கடையடைப்பு

வியாபாரிகள் உண்ணாவிரதத்தையோட்டி நெல்லை டவுன் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் வெளியூரில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வரவில்லை. பொதுமக்களும் காய்கறி வாங்க வராததால், மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.