பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் சாவு: மின்கம்பத்தை மாற்றக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் போராட்டம்


பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் சாவு: மின்கம்பத்தை மாற்றக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் போராட்டம்
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 11:00 PM GMT)

பந்தலூர் அருகே பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் இறந்ததையடுத்து, அந்த மின்கம்பத்தை மாற்றக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலூர்,

பந்தலூர் அருகே புளியம்பாறை மேல்அட்டிகொல்லியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் ஹரிகரன் (வயது 9), இவன் புளியம்பாறை அரசு தொடக்கபள்ளியில் படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி, பள்ளியின் மாடியில் கிடந்த பந்தை எடுக்க சென்றபோது, கட்டிடத்தில் மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் பள்ளியில் வைத்திருந்த மாணவன் ஹரிகரன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாணவ-மாணவிகள் திடீரென பள்ளியின் அருகே உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும், பாழடைந்து உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதியகட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், போதிய கழிப்பறை வசதிகள் செய்துதர வேண்டும், ஆசிரியர்கள் பற்றாக்குறை போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன், தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிச்சந்திரன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தணன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மனோவா மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பள்ளி அருகே மின்கம்பத்தை மாற்ற இடம் இல்லை. அருகில் உள்ள தோட்ட உரிமையாளர் மின்கம்பம் அமைக்க ஒத்துழைப்பு தந்தால் உடனே மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதற்கு தோட்ட உரிமையாளர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பள்ளியின் அருகே இருந்த மின்கம்பத்தை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story