விழுப்புரத்தில், சாலை விரிவாக்க பணிக்காக 2 கோவில்கள் அகற்றம்
விழுப்புரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக 2 கோவில்கள் இடித்து அகற்றப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நான்குமுனை சந்திப்பில் இருந்து கோலியனூர் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாகியும் இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடந்து வந்தது.
சில கடைகளின் ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் இருப்பதால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களை அப்புறப்படுத்தவும் முடிவு செய்த நெடுஞ்சாலைத்துறையினர் அதற்காக சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகள், கோவில், தேவாலய நிர்வாகத்தினருக்கு நோட்டீசு அனுப்பினர். இருந்தபோதிலும் அவர்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி நெடுஞ்சாலைத்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலைக்கு சென்று அங்கு சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த 2 கிறிஸ்தவ தேவாலயங்கள், பானாம்பட்டு சாலை சந்திப்பில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் கடைகளின் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
மேலும் ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் உள்ள பாலமுருகன் கோவில், கிழக்கு சண்முகபுரம் காலனிக்கு செல்லும் முனையில் உள்ள ராஜகணபதி கோவில், மகாராஜபுரத்தில் உள்ள புத்துவாழி மாரியம்மன் கோவில் ஆகியவற்றையும் அகற்ற முயன்றனர். இதற்கு அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கோவிலில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற சில நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதன் பேரில் பாலமுருகன், ராஜகணபதி ஆகிய கோவில்களின் நிர்வாகத்தினருக்கு தலா 3 நாட்களும், புத்துவாழி மாரியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு 5 நாட்களும் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பாலமுருகன் கோவிலில் இருந்த சாமி சிலைகளுக்கு நேற்று முன்தினம் பூஜைகள் செய்யப்பட்டு கோவிலில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதுபோல் கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் அம்பிகா, வினோதினி, உதவி பொறியாளர் ஸ்ரீதர், தாசில்தார் கணேசன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பாலமுருகன் கோவில் அகற்றும் பணி நடந்தது. 1 மணி நேரத்திற்குள் அந்த கோவில் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதற்கிடையில் ராஜகணபதி கோவிலில் இருந்த சாமி சிலைகளை அதன் நிர்வாகத்தினர் நேற்று காலை 10 மணி வரை கோவிலில் இருந்து வெளியே எடுக்கவில்லை. உடனே அதிகாரிகள் விரைந்து சென்று 1 மணி நேரம் அவகாசம் கொடுத்தனர். அதற்குள் அந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்த விநாயகர் சிலை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ராஜகணபதி கோவிலும் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி சாலை விசாலமாக காட்சியளித்தது.
சாலை விரிவாக்க பணிக்காக கோவில்கள் அகற்றப்பட்டதையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழுப்புரம் நகரில் சாலை விரிவாக்க பணிக்காக 2 கோவில்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story