என்.எல்.சி. சுரங்கத்தில் ராட்சத எந்திரம் சேற்றில் சிக்கியது. மண்ணின் உறுதித்தன்மையை அறியாமல் இயக்கியதால் சம்பவம்


என்.எல்.சி. சுரங்கத்தில் ராட்சத எந்திரம் சேற்றில் சிக்கியது. மண்ணின் உறுதித்தன்மையை அறியாமல் இயக்கியதால் சம்பவம்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:45 PM GMT (Updated: 12 Sep 2019 11:15 PM GMT)

மண்ணின் உறுதித் தன்மையை அறியாமல் இயக்கியதால் என்.எல்.சி. சுரங்கத்தில் ராட்சத எந்திரம் சேற்றில் சிக்கியது.

நெய்வேலி, 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின்நிலையங்கள் உள்ளன. இங்குள்ள சுரங்கங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சுரங்கத்தில் சுமார் ரூ.120 கோடி மதிப்புள்ள 1573 என்ற எண் கொண்ட ராட்சத மண் வெட்டும் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் சுரங்கம் 1-ல் இருந்து சுரங்கம் 1 ஏ-வுக்கு அந்த ராட்சத மண் வெட்டும் எந்திரத்தை ஊழியர்கள் நகர்த்தி சென்றனர்.

அப்போது மண்ணின் உறுதித் தன்மையை சரியாக அறியாமல் எந்திரத்தை நகர்த்தியதாக தெரிகிறது. இதனால் சேறும், சகதியுமாக இருந்த பகுதியில் அந்த ராட்சத எந்திரம் சிக்கியது. அதிகாரிகள், ஊழியர்கள் நீண்ட நேரம் போராடியும் மண் வெட்டும் எந்திரம் வெளியே வரவில்லை. மாறாக லேசாக ஒரு பக்கம் சாய்ந்தது. இதை கண்ட அதிகாரிகள் மண் வெட்டும் எந்திரத்தை மேலும் நகர்த்தாமல் விட்டனர்.

பின்னர் மீண்டும் சேறும், சகதியுமாக இருந்த பகுதியை திடப்படுத்தி எந்திரத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சேற்றில் ராட்சத எந்திரம் சிக்கிய புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல்(பேஸ்புக்) போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Next Story