மேட்டூரில் இருந்து அதிக அளவு நீர் திறப்பு: கொள்ளிடம் வழியாக 2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலப்பு


மேட்டூரில் இருந்து அதிக அளவு நீர் திறப்பு: கொள்ளிடம் வழியாக 2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 10:15 PM GMT (Updated: 12 Sep 2019 11:15 PM GMT)

மேட்டூரில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் வழியாக கடந்த 2 நாட்களாக 2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. அதே நேரத்தில் கடைமடை பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்த ஆண்டும் மேட்டூர் அணை தாமதமாக கடந்த மாதம்(ஆகஸ்டு) 13-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101 அடியாக இருந்தது. முதலில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1-ந் தேதி முதல் 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகம் மற்றும் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியதையடுத்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 5-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

பின்னர் 35 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. மேலும் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தால் திறக்கப்படும் அளவு 8-ந் தேதியில் இருந்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் 506 கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கல்லணைக்கு கீழே காவிரி, குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழன்ஆறு, புதுமன்னியாறு, மஞ்சளாறு, மகிலை ஆறு, கண்ணனாறு, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு, கோரையாறு, பாண்டவையாறு, புது ஆறு, வெள்ளையாறு, முள்ளியாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி, திருமலைராஜன் ஆறு, புத்தாறு உள்பட 36 கிளை ஆறுகள் பாய்கின்றன. இந்த 36 கிளை ஆறுகளில் தண்ணீர் தற்போது கடைமடை பகுதி வரை சென்றுள்ளன.

இந்த ஆறுகளில் இருந்து பெரும்பாலான பாசன வாய்க்கால்களில் திறக்கப்பட்டாலும், இன்னும் ஒருசில பகுதிகளில் வாய்க்கால்களில் தண்ணீர் கடைமடை பகுதியை சென்றடையவில்லை. கல்லணைக்கால்வாய் பாசன பகுதிகளில் தஞ்சை மாவட்டத்தில் வடகாடு, வெட்டிக்காடு பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பெரிய பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்லவில்லை. இந்த வாய்க்கால்களில் இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் சீர்காழி, கொள்ளிடம், பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் இன்னும் செல்லவில்லை. சீர்காழி பகுதியில் உள்ள கழுமலையாறு வாய்க்காலில் இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. கொள்ளிடம் பகுதியில் உள்ள பூதுமண்ணியாற்றில் உள்ள மாதானம் வாய்க்காலிலும் இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.

இதேபோல் திருவாரூர், நாகை மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் கடைமடையை சென்றடையவில்லை.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், காவிரி டெல்டா பகுதிகளில் அனைத்து கிளை ஆறுகளிலும் தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றடைந்து விட்டது. தற்போது பாசன வாய்க்கால்களில் கடைமடை பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 694 ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிருநாளில் தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்து விடும்.

கொள்ளிடத்தில் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டாலும் வீராணம் ஏரி, பாசனத்துக்கு திறக்கப்பட்டது, பல்வேறு மாவட்டங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் தண்ணீர் எடுத்தது போக தற்போது கடந்த 2 நாட்களாக 2 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் 24 மணி நேரமும் கடலில் கலந்தால் 1 டி.எம்.சி. ஆகும். தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு குறைக்கப்படும்” என்றனர்.

Next Story