மாவட்ட செய்திகள்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக அறுவை சிகிச்சை: தாயாரின் சிறுநீரகத்தை வாலிபருக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை + "||" + First operation at Asaripallam Government Hospital:mother's kidney transplant to youth

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக அறுவை சிகிச்சை: தாயாரின் சிறுநீரகத்தை வாலிபருக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக அறுவை சிகிச்சை: தாயாரின் சிறுநீரகத்தை வாலிபருக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல் முறையாக வாலிபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். தாயாரின் சிறுநீரகம் வாலிபருக்கு பொருத்தப்பட்டது.
நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 28), தொழிலாளி. இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. 2 சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால் செல்வன் மிகவும் அவதி அடைந்தார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் முதலில் அவர் சிகிச்சைக்கு வந்தபோது ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் கிடையாது. எனவே டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.


இந்த நிலையில் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து செல்வனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து செல்வனின் தாயார் தில்லைமணி, தன்னுடைய சிறுநீரகம் ஒன்றை மகனுக்கு வழங்க முடிவு செய்தார்.

அதன்படி தில்லைமணியின் சிறுநீரகத்தை பாதுகாப்புடன் எடுத்து செல்வனுக்கு பொருத்தும் பணி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் கடந்த 3-ந் தேதி நடந்தது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்போது செல்வன் மற்றும் அவருடைய தாயார் தில்லைமணி ஆகிய 2 பேரும் பூரண குணம் அடைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இதுதொடர்பாக கல்லூரி டீன் பாலாஜிநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிறுநீரகவியல் துறை டாக்டர்கள் பத்மகுமார், அருண் வர்க்கீஸ், சிறுநீரக அறுவை சிகிச்சை துறை டாக்டர் பிராங்க் டேவிஸ், செல்வகுமார், ரத்தநாள துறை டாக்டர்கள் ராஜேஷ், மயக்கவியல் நிபுணர் எட்வர்ட் ஜாண்சன் ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழுவினர் செல்வத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்களும் பங்கேற்றனர். அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயலால் இவர்களை ஒருங்கிணைத்தார். சுமார் 4½ மணி நேரம் வரை அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை முதல்முறையாக இங்கு நடந்துள்ளது.

இதே அறுவை சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் செய்தால் 8 லட்சம் ரூபாய் செலவு ஆகும். ஆனால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்துள்ளோம். எனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைகள் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவர் கலைக்குமார், டாக்டர் ரெணிமோள் உள்பட பலர் உடனிருந்தனர்.