மின்னணு பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அங்கீகாரம் பெற வேண்டும் - அதிகாரி தகவல்


மின்னணு பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அங்கீகாரம் பெற வேண்டும் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 Sept 2019 4:00 AM IST (Updated: 13 Sept 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் மின்னணு கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல் மற்றும் அகற்றுதல் குறித்து மின்னணு கழிவுகள் மேலாண்மை விதிகள் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளின்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் மின் மற்றும் மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர், லேப்டாப், தொலைபேசி, டி.வி. மற்றும் ‘வாஷிங் மெஷின்’ போன்றவற்றை அதன் பயன்பாடு காலம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பான முறையில் மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

இவை பாதுகாப்பான முறையில் அகற்றுவதை உறுதி செய்யும் பொருட்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அதன்படி, மின்சாதன தயாரிப்பாளர்கள் தங்களது சாதனங்களை வினியோகஸ்தர்கள் மூலமாகவோ, சில்லரை வியாபாரிகள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்தபின் அப்பொருட்களின் ஆயுட்காலம் முடிந்தவுடன் தயாரிப்பாளர்களின் நீடித்த பொறுப்பு என்ற அடிப்படையில் அவற்றினை திரும்ப பெற்று மறுசூழற்சிக்கு அனுப்புவது அவர்களது கடமையாகும்.

விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் ஆயுட்காலம் முடிவடைந்த உடன் அதை நுகர்வோர்களிடம் இருந்து மீண்டும் திரும்ப பெறும் வகையில், மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்கான தொட்டி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும். மேலும் நுகர்வோரிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான வசதியினை செய்திட வேண்டும். அக்கழிவுகள் மறுசூழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

இதை மின்னணு பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், சீரமைப்பவர்கள், பிரித்தெடுப்பவர்கள், மறுசூழற்சி செய்பவர்கள் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும். கையாளப்படும் மின்னணு கழிவுகள் குறித்த தகவல்களை பதிவு செய்து பராமரித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story