கட்டளை வாய்க்காலில், தனியார் நிறுவன ஊழியர் பிணம் அழுகிய நிலையில் மீட்பு கொலையா? போலீசார் விசாரணை


கட்டளை வாய்க்காலில், தனியார் நிறுவன ஊழியர் பிணம் அழுகிய நிலையில் மீட்பு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Sep 2019 10:45 PM GMT (Updated: 12 Sep 2019 11:16 PM GMT)

திருவெறும்பூர் அருகே கட்டளை வாய்க்காலில் தனியார் நிறுவன ஊழியர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவெறும்பூர்,

திருச்சி மாத்தூர் ரவுண்டானா அருகில் உள்ள மாருதிநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 53). இவர் மாத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற பன்னீர்செல்வம், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உமாமகேஸ்வரி நவல்பட்டு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர் செல்வத்தை தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பூலாங்குடி காலனி பாரத்நகர் பகுதியில் கட்டளை வாய்க்காலில் நேற்று காலை ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் மிதந்து வந்தது. இதை அந்த வழியாக சென்ற ஒரு பெண் பார்த்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஆண் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர், கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன பன்னீர்செல்வம் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பன்னீர்செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அவரை யாராவது கொலை செய்து, பிணத்தை வாய்க்காலில் வீசி சென்றனரா? அல்லது அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story