குன்னம் பஸ் நிலைய நிழற்குடை ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி
குன்னம் பஸ் நிலைய பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குன்னம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தாலுகா அலுவலகம், வங்கிகள், பள்ளிகள், போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தினமும் ஏராளமான மக்கள் குன்னம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
குன்னத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட விருப்ப நிதியிலிருந்து குன்னம் பஸ் நிலையம் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடை அமைக்கப்பட்ட பின் பயணிகள் அதன் கீழ் நிற்பதில்லை ஏன் எனில் நிழற்குடை அருகில் பூ மற்றும் பழங்கள் விற்பவர்கள் நிரந்தரமாக கடை அமைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தான் தஞ்சம் அடைய வேண்டிய நிலை உள்ளது.
பயணிகள் நிழற்குடை அருகில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் உள்ளது. அந்த குடிநீர் விற்பனையகம் முன்பு பூக்கடை வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அம்மா குடிநீர் விற்பனைசெய்பவர் கடந்த 5 மாதங்களாகவே கடையை திறக்கவே இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நிழற்குடையை சுற்றிலும் உள்ள கடைகளுக்கு பொருட்களை வாங்க வருபவர்களால் கூட்டம் கூடுகிறது.
இதனால் அங்கு பஸ்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடியே பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இதனால் அத்துறை சம்பந்தபட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடை முன்பு உள்ள கடைகளை உடனே அகற்றி அந்த நிழற்குடையை விரிவுபடுத்தி தர வேண்டும் எனவும் பயணியர் நிழற்குடை பெயர் பலகையை மறைந்து விளம்பர தட்டிகள் கட்டுவதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story