ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் சாவு


ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் சாவு
x
தினத்தந்தி 13 Sept 2019 4:15 AM IST (Updated: 13 Sept 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் குமரவேல் (வயது 26). இவர் நேற்று காலை அரசம்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் காவிரி ஆற்றில் குமரவேலை தேடினர்.

இந்த நிலையில் மாலையில் அரசம்பாளையம் காவிரி ஆற்றின் சிறிது தூரத்தில் குமரவேல் பிணமாக மீட்கப்பட்டார். காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story