மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில்நடப்பு நிதி ஆண்டில் ரூ.800 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில்நடப்பு நிதி ஆண்டில் ரூ.800 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
x
தினத்தந்தி 13 Sept 2019 5:00 AM IST (Updated: 13 Sept 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.800 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேரவை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு இயக்கங்கள் வலிமை அடைந்த காரணத்தால் தான் தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை ஒழிந்துள்ளது. முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கூட்டுறவு இயக்கங்கள் வலிமை பெற்றன. காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்தும்.

ரூ.800 கோடி இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் 2013-ம் ஆண்டில் நிர்வாகக்குழு பொறுப்பேற்றபோது ரூ.1,038 கோடியாக இருந்த வைப்புத்தொகை தற்போது ரூ.1,900 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-2018-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 92 ஆயிரம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி, கறவை மாடுகள் வாங்க மத்திய கால கடன் வழங்கியதன் மூலம் தற்போது 3 லட்சத்து 4 ஆயிரம் லிட்டராக அதிகரித்து உள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நடப்பு நிதி ஆண்டில் பயிர்க்கடன் வழங்க ரூ.800 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

1,210 பேருக்கு ஆடுகள் வளர்ப்பதற்காக ரூ.10 கோடியே 39 லட்சம் கடந்த 2017-2018-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்திடும் வகையில் 7 ஆயிரத்து 223 பேருக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வாங்கிட நபார்டு வங்கியின் மூலம் மானியம் பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

தனிநபர் தானிய ஈட்டுக்கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. பள்ளிக்கூட மாணவ -மாணவிகளிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திடும் வகையில் சிறு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கியானது 2018-2019-ம் ஆண்டில் ரூ.25 கோடியே 57 லட்சம் லாபம் ஈட்டி உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக ஆண்டறிக்கை மலர் வெளியிடப்பட்டு, பணியின்போது மரணமடைந்த 3 கூட்டுறவு சங்க பணியாளர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப நல காப்பீட்டு திட்டத்தின் மூலம் தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைவர் காளியப்பன், கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் சந்திரசேகரன், மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன், துணைத்தலைவர் கேசவமூர்த்தி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் மனோகரன், நிர்வாகக்குழு இயக்குனர்கள் ஜீவா ராமசாமி, தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story