குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க கர்நாடகத்தில் ‘போஷன்’ திட்டம் 19 மாவட்டங்களில் அமல்
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க கர்நாடகத்தில் ‘போஷன்‘ திட்டம் 19 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க கர்நாடகத்தில் ‘போஷன்‘ திட்டம் 19 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
ஊட்டச்சத்து குறைபாடு
முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள ‘போஷன்‘ இயக்க திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் பேசிய ஸ்மிரிதி இரானி, “இந்த போஷன் இயக்க திட்டம் அற்புதமானது. விழிப்புணர்வு இயக்கம் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை தடுப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு மாநில அரசு ஆதரவு வழங்க வேண்டும். இந்த திட்டத்தை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தியுள்ளோம். இதுகுறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்“ என்றார்.
நல்ல வரவேற்பு
அதைத்தொடர்ந்து எடியூரப்பா பேசியதாவது:-
கர்நாடகத்தில் இந்த போஷன் திட்டம் 19 மாவட்டங்களில் அமல்படுத்த மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மீதமுள்ள 11 மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவேன். இந்த திட்டத்திற்கு கர்நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்வேன்.
இந்த திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக அமல்படுத்த பிரதமர் மோடி ஆர்வம் காட்டியுள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபலமானவர்கள் மூலம் இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வேன். இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இதில் கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி சசிகலா ஜோலே உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story