நெகமம் அருகே, மகாலட்சுமி கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை


நெகமம் அருகே, மகாலட்சுமி கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை
x
தினத்தந்தி 14 Sept 2019 4:00 AM IST (Updated: 13 Sept 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே கப்பளாங்கரையில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பலலட்சம் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

நெகமம்,

கோவை மாவட்டம் நெகமம் அருகே கப்பளாங்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, ஆடிவெள்ளி மற்றும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களால் ஐம்பொன்னால் ஆன 2¼ அடி மற்றும் 1¼ அடியில் இரண்டு மகாலட்சுமி அம்மன் சிலைகள், அதே போன்று இரண்டு பெருமாள் சிலைகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இந்த சிலைகள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல 8 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி சுப்பிரமணியம் (வயது55) சென்றுள்ளார். நேற்று பவுர்ணமி என்பதால் அதிகாலையில் பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். கோவில் கதவை திறந்து உள்ளே சென்ற போது கோவிலின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகள் மற்றும், மகாலட்சுமி கற்சிலையில் இருந்த வெள்ளி கிரீடம், தங்க பொட்டு தாலி, குத்துவிளக்கு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி சுப்பிரமணியம் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு கோவையில் இருந்து மோப்ப நாய் ஹரி வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் கோவில் மற்றும் அப்பகுதியை சுற்றிலும் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தி அங்கு பதிவானவைகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்குள் திருடவந்த திருடர்கள் பித்தளைபொருட்களை திருடாமல் ஐம்பொன்சிலைகள், நகைகளை மட்டும் திருடிசென்றுள்ளதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஐம்பொன் சிலைகளை குறிவைத்து திருடும் கும்பலா? என்று சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக கப்பளாங்கரைபகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் கோவில்முன்பு ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கூடியதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Next Story