மாவட்ட செய்திகள்

என்ஜினீயர் காரில் கடத்தல்: பணம் மற்றும் செல்போன்கள் பறித்தவர் கைது + "||" + Engineer in car Kidnapping Money and cell phones seized

என்ஜினீயர் காரில் கடத்தல்: பணம் மற்றும் செல்போன்கள் பறித்தவர் கைது

என்ஜினீயர் காரில் கடத்தல்: பணம் மற்றும் செல்போன்கள் பறித்தவர் கைது
சென்னையில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் என்ஜினீயரை காரில் கடத்திச் சென்று பணம் மற்றும் செல்போன்களை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,

அமெரிக்காவில் என்ஜினீயராக வேலை பார்ப்பவர் கிருஷ்ணன். இவர் குடும்பத்தோடு அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்க ‘கிரீன் கார்டு’ வைத்துள்ளார். இவர் கடந்த 7-ந்தேதி அன்று சென்னை தியாகராயநகரில் வசிக்கும் தனது தந்தையை பார்க்க குடும்பத்தோடு சென்னை வந்தார்.


தியாகராயநகரில் வசிக்கும் தனது தந்தையோடு தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு தியாகராயநகர் தெற்கு போக்ஸ் சாலையில் உள்ள மதுக்கடை ஒன்றில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அதே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 11 மணி இருக்கும்.

அந்தநேரத்தில், அந்த வழியாக காரில் 3 பேர் வந்தனர். அவர்கள் கிருஷ்ணனை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் கிருஷ்ணனை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். தாம்பரம் பகுதியில் வைத்து கிருஷ்ணன் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டு மூலம், ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முயன்றனர். ஆனால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்மநபர்கள் கிருஷ்ணன் வைத்திருந்த வங்கி ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு, அமெரிக்க கிரீன் கார்டு மற்றும் 2 செல்போன்கள், பணம் ஆகியவற்றை பறித்தனர்.

பின்னர் கிருஷ்ணனை அங்கேயே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் பாலமுரளி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். கிருஷ்ணன் காரில் கடத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அவர் கடத்தப்பட்ட காரின் நம்பரை வைத்து போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

கிருஷ்ணனை காரில் கடத்தியதாக தாம்பரம் முடிச்சூரை சேர்ந்த நாகராஜன் (வயது 34) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். கிருஷ்ணனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் நாகராஜனின் கார் என்று கூறப்படுகிறது.

காரை அவர்தான் ஓட்டி வந்துள்ளார். கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நாகராஜனின் நண்பர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.