கேரளாவில் தொடர் விடுமுறை: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


கேரளாவில் தொடர் விடுமுறை: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 5:43 PM GMT)

கேரளாவில் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி,

கேரளாவில் கடந்த 11-ந் தேதி ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் கழிக்க கேரள சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வழக்கமாக சீசன் காலங்களில் தான் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே தெரிகின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததை காண முடிந்தது. பூங்காவுக்கு வருகிறவர்களை வரவேற்கும் வகையில் நுழைவுவாயில் பகுதியில் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. பழமையான வெளிநாட்டு மரங்கள், அலங்கார செடிகள், பச்சை பசேல் என புல்வெளிகள், கண்ணாடி மாளிகைகள், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

மேலும் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள். பூங்கா அலுவலகம் எதிரே உள்ள புல்வெளி மைதானம் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டு இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க சுற்றிலும் கயிறு கட்டப்பட்டு உள்ளது. கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதுடன், அதனை செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 2-வது சீசனையொட்டி பூங்காவில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வகைகளை சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. அதில் டேலியா, சால்வியா, மேரிகோல்டு போன்ற மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவை இன்னும் சில நாட்களில் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விடப்படுகிறது.

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அங்கு மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்தார்கள். அதேபோல் ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர்.

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலை மற்றும் ஊட்டியில் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, தாவரவியல் பூங்கா சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

Next Story