சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு மேலும் 4 நாட்கள் போலீஸ் காவல் டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவு
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு மேலும் 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
பெங்களூரு,
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு மேலும் 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
மனு தள்ளுபடி
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரூ.8.59 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது. இதுகுறித்த விசாரணையை அமலாக்கத்துறையிடம் வருமான வரித்துறை ஒப்படைத்தது.
இந்த நிலையில் இதுபற்றிய விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனுக்கு தடை விதிக்க கோரிய டி.கே.சிவக்குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த மாதம்(ஆகஸ்டு) ஆஜரானார்.
ரூ.200 கோடி பண பரிமாற்றம்
அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், கடந்த 3-ந் தேதி கைது அவரை செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். டி.கே.சிவக்குமாருக்கு 13-ந் தேதி வரை(நேற்று) 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமாரின் மகளை வரவழைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த நிலையில் நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, டெல்லி சிறப்பு கோர்ட்டில் டி.கே.சிவக்குமாரை நேற்று மாலை 4 மணியளவில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது வாதாடிய அமலாக்கத்துறை வக்கீல், “சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பும் கேள்விகளுக்கு டி.கே.சிவக்குமார் சரியான முறையில் பதிலளிக்கவில்லை. ரூ.200 கோடி பண பரிமாற்றம் குறித்து அவர் பதில் கூறவில்லை. அவரது மகளையும் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளோம். இதுகுறித்து இன்னும் விசாரிக்க வேண்டி இருப்பதால் டி.கே.சிவக்குமாருக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்க வேண்டும்“ என்று கூறினார்.
மேலும் 4 நாட்கள்
அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், “டி.கே.சிவக்குமாரிடம் 13 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். இனி அவரிடம் விசாரணை நடத்த எதுவும் இல்லை. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டியுள்ளது. கோர்ட்டு எந்த உத்தரவை பிறப்பித்தாலும், டி.கே.சிவக்குமாரை உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டியது அவசியம். அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அமலாக்கத்துறை மூடிமறைக்கிறது. டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்“ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டி.கே.சிவக்குமாருக்கு வருகிற 17-ந் தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதாவது டி.கே.சிவக்குமாருக்கு மேலும் 4 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்துவதற்கு முன்பு டி.கே.சிவக்குமாருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். வருகிற திங்கட்கிழமைக்குள்(16-ந் தேதி) ஆட்சேபனையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆதரவாளர்கள்
டி.கே.சிவக்குமாரை காண அவரது ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் கோர்ட்டு வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரசார் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story