கோவில்பட்டி இரட்டைக்கொலை வழக்கில் பன்றிக்கறி வியாபாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


கோவில்பட்டி இரட்டைக்கொலை வழக்கில் பன்றிக்கறி வியாபாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 14 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் பன்றிக்கறி வியாபாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி, 

கோவில்பட்டியில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் பன்றிக்கறி வியாபாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

பன்றிக்கறி வியாபாரம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் குருசாமி (வயது 43). இவர் பன்றிக்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த உத்தண்டராமன் மகன் செண்பகராஜ் (35), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த காசி என்ற சிவாஜி மகன் செந்தில்குமார் (28) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் பன்றியை கோவில்பட்டி அண்ணாநகர் பகுதியில் வைத்து தீயில் வாட்டி எடுத்து, அதன்பிறகு கறியை கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக, கோவில்பட்டி வீரவாஞ்சிநகரை சேர்ந்த அரசு ஆஸ்பத்திரி டிரைவர் முருகன் (45), அவருடைய உறவினர் நகராட்சி உதவியாளர் பாலமுருகன் (36) ஆகியோர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மற்றும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் குருசாமியை எச்சரித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இரட்டைக்கொலை

இந்த நிலையில் கடந்த 6-11-13 அன்று குருசாமி, முருகனை பேச்சுவார்த்தைக்காக அழைத்து உள்ளார். இதனால் முருகன், பாலமுருகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஜோதிநகருக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்த குருசாமி, செண்பகராஜ், செந்தில்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து முருகன், பாலமுருகன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்கள்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், குற்றம் சாட்டப்பட்ட குருசாமி, செண்பகராஜ், செந்தில்குமார் ஆகிய 3 பேருக்கும் 2 கொலைகளுக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.6 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யு.எஸ்.சேகர் ஆஜரானார்.

Next Story