மாவட்டம் முழுவதும் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத 1 லட்சம் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்


மாவட்டம் முழுவதும் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத 1 லட்சம் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 7:45 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத 1 லட்சம் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி நடக்கிறது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் உள்பட ஒருசில மாவட்டங்களில் ஆண்டு தோறும் பருவமழை குறைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்ற வண்ணம் இருக் கிறது. இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மழைநீரை முழுமையாக சேமிப்பதற்கு, நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடக்கிறது.

அதோடு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு, மழைநீர் சேமிப்பில் பொதுமக்களும் ஈடுபட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதோடு, மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரம் கட்டிடங்கள் இருக்கின்றன. இவற்றில் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களின் கணக்கெடுப்பு நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சிகளில் நகரமைப்பு அலுவலர்கள், கிராமப்புற பகுதிகளில் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் என மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மழைநீர் சேமிப்பு வசதி உள்ள கட்டிடங்களில், நன்றி தெரிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதேநேரம் 1 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாதது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நடக்கிறது.

இதற்கிடையே விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. அதற்குள் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்தினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

எனவே, அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஊரக வளர்ச்சித்துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story