குருபரப்பள்ளி அருகே கார் மோதி சிறுமி பலி


குருபரப்பள்ளி அருகே கார் மோதி சிறுமி பலி
x
தினத்தந்தி 14 Sept 2019 4:15 AM IST (Updated: 14 Sept 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

குருபரப்பள்ளி அருகே கார் மோதி சிறுமி பலியானாள்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பெத்தப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). இவரது மகள் ஈஸ்வரி(7). இவள் நேற்று முன்தினம் மாலையில் வேப்பனப்பள்ளி-குந்தாரப்பள்ளி செல்லும் சாலையில் தளவாய்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுமி ஈஸ்வரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவளை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story