மயிலாடுதுறையில் நவீன ஆடு வதைகூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


மயிலாடுதுறையில் நவீன ஆடு வதைகூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:45 PM GMT)

மயிலாடுதுறையில், நவீன ஆடு வதைகூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறையில், நகராட்சி சார்பில் கடந்த 2007-2008-ம் ஆண்டு ரூ.21 லட்சம் செலவில் நவீன ஆடு வதைகூடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்திற்கு தினமும் இறைச்சிக்காக வதை செய்யப்படும் ஆடுகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய கால்நடை டாக்டர் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்வார்கள்.

அதன்பின்னர் நவீன வதைகூடத்தில் ஆடுகளுக்கு உயிர் பிரியும் சமயத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் கத்தியின்றி, ரத்தமின்றி நவீன முறையில் துப்பாக்கி மூலம் வதை செய்யப்படும். பின்னர் அந்த ஆடுகளின் இறைச்சி நகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் சீல் வைத்து விற்பனைக்கு அனுப்பப்படும். இதனை நகராட்சியின் நகர்நல அலுவலர் உறுதி செய்வார். மேலும், ஆடுகளை வதை செய்யப்படும்போது ஏற்படும் கழிவுகள், இயற்கை உரம் தயாரிக்கும் நகராட்சி மையத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு ஆட்டு இறைச்சியை பொதுமக்களுக்கு சுகாதாரமாக விற்பனை செய்வதற்காக கட்டப்பட்டுள்ள நவீன ஆடு வதை கூடம் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் கடை வைத்து சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்து வருகின்றனர். எனவே, மிருக வதை தடை சட்டத்தை பின்பற்றும் வகையிலும், ஆட்டு இறைச்சியை சுகாதாரமாக விற்பனை செய்யும் வகையிலும் நகராட்சி நிர்வாகத்தினர் உரிய கவனம் செலுத்தி நவீன ஆடு வதை கூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story