ஊழியர்கள் இல்லாததால் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி


ஊழியர்கள் இல்லாததால் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
x
தினத்தந்தி 13 Sep 2019 11:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:45 PM GMT)

அங்கன்வாடி மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக என்.பஞ்சம்பட்டியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பெண்கள் புகார் அளித்தனர்.

சின்னாளபட்டி,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து இயக்கத்தின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லவும், ஊட்டச்சத்து மாதம் கொண்டாடுதல் குறித்தும் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்டம் முழுவதும் நடந்தது. சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினார்.

ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘ஆத்தூர் ஒன்றியத்தில் அம்மா இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு திட்டத்தின் கீழ் கபடி, கைப்பந்து, கால்பந்து அல்லது கிரிக்கெட் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இதில் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொள்ளலாம் என்றார்.

இதனைத்தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை சேர்ந்த பணியாளர்கள் பேசும்போது, அரசு சார்பில் நடத்தப்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சேர்க்கலாம் என்றனர்.

அப்போது குறுக்கிட்ட பெண்கள், பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களே இல்லை. மேலும் ஊழியர்களும் சில நேரங்களில் கூட்டத்துக்கு செல்வதாக கூறி குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு அங்கன்வாடி மையத்தை பூட்டி விட்டு செல்கின்றனர். இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது’ என்றனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதேபோல் ஆலமரத்துப்பட்டியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி தலைமையிலும், ஊராட்சி செயலாளர் சிவராஜன் முன்னிலையிலும், தேவரப்பன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பற்றாளர் ராமசாமி தலைமையிலும், ஊராட்சி செயலாளர் கண்ணன் முன்னிலையிலும், அய்யன்கோட்டை ஊராட்சியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் சுமதி தலைமையிலும், ஊராட்சி செயலாளர் கண்ணன் முன்னிலையிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

நத்தம் அருகே லிங்கவாடி ஊராட்சியில், நத்தம் ஊராட்சி ஒன்றிய பற்றாளர் ராம்குமார் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் அன்புச்செல்வம் முன்னிலையிலும், வேலம்பட்டி ஊராட்சியில் பற்றாளர் ஆபிரகாம் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் செந்தில்குமரன் முன்னிலையிலும், ரெட்டியபட்டி ஊராட்சி வத்திபட்டியில் பற்றாளர் முத்துலட்சுமி தலைமையிலும், ஊராட்சி செயலாளர் மணி முன்னிலையிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

இதேபோல், பண்ணுவார்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச ராகவன் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் கருப்பையா முன்னிலையிலும், சாத்தம்பாடி ஊராட்சி கோமணாம்பட்டியில் பற்றாளர் முருகானந்தம் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் பொன்னன் முன்னிலையிலும், புன்னப்பட்டி ஊராட்சியில் உலுப்பகுடியில் பற்றாளர் பாலமுருகன் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி முன்னிலையிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

Next Story