திருமருகல் முடிகொண்டான் ஆற்றுக்கு காவிரி நீர் வந்தது - விவசாயிகள் மகிழ்ச்சி


திருமருகல் முடிகொண்டான் ஆற்றுக்கு காவிரி நீர் வந்தது - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Sep 2019 9:45 PM GMT (Updated: 13 Sep 2019 7:46 PM GMT)

திருமருகல் முடிகொண்டான் ஆற்றுக்கு காவிரி நீர் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமருகல், 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் கடைமடை பகுதியில் உள்ள 9 ஆறுகள் மூலம் விவசாயிகள் பாசனம் பெற்று சுமார் 13 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி செய்து வந்தனர். இந்த நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சில ஆறுகளில் தண்ணீர் வந்தது. ஆனால், கடைமடை பகுதியான திருமருகல் முடிகொண்டான் ஆற்றில் மேட்டூர் அணை திறந்து 23 நாட்கள் ஆகியும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் சம்பா சாகுபடி பணியை மேற்கொண்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மேலும் திருமருகல் முடிகொண்டான் ஆற்றில் புத்தகரம் முதல் குருவாடி வரை செடி, கொடிகள் மண்டி ஆறு தூர்வாரப்படாமல் இருந்தது. தென்பிடாகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள மதகுகள் உடைந்து காணப்பட்டது. முடிகொண்டான் ஆற்றில் தண்ணீர் வராததால் அந்த பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருமருகல் கடைமடை பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி உடைந்த மதகுகளை சீரமைத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து முடிகொண்டான் ஆற்றுக்கு காவிரி நீர் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நன்னிலம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, திருமருகல் உதவி பொறியாளர் ரத்தினவேல் ஆகியோர் முடிகொண்டான் ஆற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Next Story