வலங்கைமான் அருகே, திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் பிணம் - உதவி கலெக்டர் விசாரணை
வலங்கைமான் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ரிஷியூர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மகள் சாதுரியா(வயது 24). இவருக்கும், வலங்கைமான் அருகே உள்ள வேப்பத்தாங்குடியை சேர்ந்த சாமிநாதன் மகன் மணிவண்ணன்(32) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த 40 நாட்களிலேயே மணிவண்ணன் சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று விட்டார். இந்த நிலையில் சாதுரியா தனது மாமனார் சாமிநாதன், மாமியார் பிரேமா ஆகியோருடன் கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார். சாதுபிரியாவின் தாயார் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்து விட்டதால் அவருடைய தாயாரின் தங்கையான கற்பகம் சிறுவயதிலிருந்தே சாதுரியாவை வளர்த்து வந்துள்ளார்.
திருமண வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கவில்லை என்பதால் சாதுரியா குடும்பத்திற்கும், மணிவண்ணன் குடும்பத்தினருக்கும் மனக்கசப்பும், விரோதமும் ஏற்பட்டுள்ளது. இரு குடும்பத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சாதுரியா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் சாதுரியா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாதுரியாவின் உடலை மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து கற்பகம் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் சாதுரியாவின் இறப்பு குறித்து திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story