மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது


மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 13 Sep 2019 9:30 PM GMT (Updated: 13 Sep 2019 7:46 PM GMT)

மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

அம்பை, 

மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

சிறுத்தை

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு வனப்பகுதியில் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது இரை மற்றும் தண்ணீர் தேடி திடீரென்று மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்வதுடன், ஆடு, நாய்கள் போன்றவற்றை வேட்டையாடி செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மணிமுத்தாறு அருகில் உள்ள அண்ணாநகர் பொத்தை பகுதியில் ராமர் என்பவருக்கு சொந்தமான ஆட்டை சிறுத்தை ஒன்று அடித்து கொன்று விட்டு சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்த வனத்துறையினர், பொத்தை பகுதியில் தானியங்கி கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

கூண்டில் சிக்கியது

அப்போது 3 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் நடமாடிய காட்சி கேமராவில் பதிவானது. இது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

எனவே, அட்டகாசம் செய்து வந்த அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொத்தை பகுதியில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டில் சிறுத்தை பிடிபடுவதற்காக ஒரு ஆடு கட்டி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் அங்கு வந்த சிறுத்தை ஆட்டை வேட்டையாட முயன்றபோது கூண்டில் சிக்கிக்கொண்டது.

வனப்பகுதியில் விட்டனர்

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை வனச்சரகர் கார்த்திகேயன், வனவர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். கூண்டில் சிக்கியிருந்த 3 வயதான அந்த சிறுத்தையை வனத்துறையினர் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

முண்டந்துறை உள்வனப்பகுதிக்கு சிறுத்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டில் இருந்த அந்த சிறுத்தையை விடுவித்தனர். அப்போது சிறுத்தை கூண்டில் இருந்து சீறிப்பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. கூண்டில் சிக்கிய சிறுத்தை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது மணிமுத்தாறு பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story