நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி - பெண் சரண்; 6 பேர் மீது வழக்குப்பதிவு


நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி - பெண் சரண்; 6 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 Sep 2019 11:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:47 PM GMT)

நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த செய்த வழக்கில் பெண் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளார். மேலும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 33). இவர் கோவையில் சாப்டுவேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த கலைச்செல்வி (வயது 48), பொன்னுசாமி (56), சிந்துஜா (24), நிர்மலா (48), மலர்கொடி (45), செல்லம்மாள் (67), பழனியாண்டி (72) ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் சீட்டு பணம் செலுத்தி வருகிறேன். இதுவரை வங்கி மூலமாகவும், நேரடியாகவும் ரூ.85 லட்சம் ஏலச்சீட்டிற்காக கொடுத்து உள்ளேன். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டனர்.

என்னை போல் பலர் இவர்களிடம் சீட்டு போட்டு ஏமாந்து உள்ளனர். சுமார் ரூ.25 கோடி வரை இவர்கள் ஏமாற்றி இருப்பார்கள் என தெரிகிறது. இவர்கள் சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்காமல் அவர்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கி உள்ளனர். எனவே பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய கலைச்செல்வி உள்பட 7 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கலைச்செல்வி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சேலம் சிறையில் அவரை அடைத்தனர்.

இதற்கிடையே கலைச்செல்வியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி குற்றப்பிரிவு போலீசார் நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெயந்தி 2 நாட்கள் கலைச்செல்வியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் கலைச்செல்வியிடம் 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நேற்று கலைச்செல்வி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இருப்பதை அறிந்த பாதிக்கப்பட்ட நபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திரண்டு வந்து தங்களது பணத்தை மீட்டு தருமாறு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு கொடுத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கலைச்செல்வி தனக்கு தொழிலில் ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து இருப்பது தெரியவந்து உள்ளது. இருப்பினும் கலைச்செல்வி யார்-யார்? பெயரில் சொத்து வாங்கி உள்ளார், எங்கெல்லாம் சொத்து உள்ளது? பினாமி பெயரில் டேங்கர் லாரிகள் வாங்கி உள்ளாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story