மதுரையில் பரிதாபம், வி‌‌ஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது


மதுரையில் பரிதாபம், வி‌‌ஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 13 Sep 2019 11:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:47 PM GMT)

மதுரை மருத்துவக்கல்லூரி டாக்டர் வி‌‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை, 

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி. அவருடைய மகன் உதயராஜ் (வயது 29). இவர் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். பின்னர் அவருக்கு மதுரை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க சீட் கிடைத்தது. அதை தொடர்ந்து அவர் தன்னுடன் படிக்கும் நண்பருடன் சேர்ந்து, மதுரை மதிச்சியம் பகுதியில் வீடு எடுத்து தங்கி மருத்துவக்கல்லூரியில் படிப்புடன், டாக்டர் பணியும் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு உதயராஜ் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அதன்பின்னர் அவரது நண்பர் இரவு பணிக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார்.

காலையில் அவருடைய நண்பர்கள் சிலர் போனில் உதயராஜை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எனவே வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரும் சென்று கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் மதிச்சியம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உதயராஜ் பிணமாக கிடந்தார். அவர் அருகில் ஊசி மற்றும் மருந்துகள் சிதறி கிடந்தன. எனவே அவர் தனக்கு தானே வி‌‌ஷ ஊசியை போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில் போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது, உதயராஜ் எழுதியதாக கடிதம் ஒன்று சிக்கியது. அதில் வேலைப்பழு மற்றும் மேற்படிப்பை சரவர படிக்க முடியாத வேதனையில் தற்கொலை முடிவை எடுத்தேன் என்று உருக்கமாக எழுதி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் சம்பவம் குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உதயராஜ் நள்ளிரவு வரை செல்போனில் பேசி உள்ளார். அதன்பின்னர் தான் வி‌‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உதயராஜூக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனவே அவர் நள்ளிரவு வரை யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்துவரும் டாக்டர் வி‌‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story