நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டு கொன்ற வழக்கில் 2 பேர் கைது - நகராட்சி பணியாளர் மீது வழக்கு


நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டு கொன்ற வழக்கில் 2 பேர் கைது - நகராட்சி பணியாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Sept 2019 3:30 AM IST (Updated: 14 Sept 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டு கொன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர், 

கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளை தெருவில் ரமே‌‌ஷ் என்கிற பெயரில் செல்ல பிராணியாக நாய் ஒன்று வளர்ந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை தெருவில் சுற்றித்திரிருந்த இந்த நாயினை, ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டதாகவும், இதில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி பொதுமக்கள் வெங்கமேடு மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குணசேகர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் வெங்கமேடு கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவரும், ஜவுளி தொழிலுக்கு துணி வடிவமைத்து கொடுக்கும் தொழில் செய்து வருபவருமான பாலசுப்பிரமணியன் (வயது 40) தன்னை கடிப்பதற்காக அந்த நாய் ஓடிவந்ததாக கூறி கரூர் நகராட்சியில் புகார் கொடுத்தார். இதனால் கரூர் நகராட்சி பணியாளர் வேலுச்சாமி, அரசு காலனியை சேர்ந்த ரமே‌‌ஷ் ஆகியோருடன் பாலசுப்பிரமணியன் அந்த தெருநாயை சாகடிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தின்போது ரமே‌‌ஷ் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் தெருநாயை சுட்டு கொன்றதாக பொதுமக்கள் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த நாட்டு துப்பாக்கியை பயன்படுத்த வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் ரமே‌‌ஷ் அனுமதி வாங்கியிருந்தது தெரியவந்தது. எனினும் துப்பாக்கி பயன்படுத்துகிற உரிமத்தை தவறாக பயன்படுத்துதல், மிருகவதை தடை சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், ரமேசை போலீசார் கைது செய்தனர். இதில் நகராட்சி பணியாளர் வேலுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே துப்பாக்கியால் சுடப்பட்ட நாயானது, கொளாந்தானூர் கால்நடை மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு போலீஸ் மூலம், பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து குளிரூட்டப்பட்ட பெட்டியில் அந்த நாய் அடைத்து வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக தெருவில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது தாங்கள் வளர்த்த செல்ல பிராணியின் பாசத்தை நினைத்து பார்த்து கண்ணீர் மல்க குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியது நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த தெருநாய் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story