ஆரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்


ஆரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. ஆரணி தாலுகா தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பினர் கோபாலராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, செயலாளர் செல்வம், பொருளாளர் சத்தியா, துணைத்தலைவர் ஜெகன், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி பெ.கண்ணன், ஆரணி தாலுகா செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அருள்குமார், துணைத்தலைவர் மகேந்திரன், துணை செயலாளர் உலகநாதன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்ய நான்கில் ஒருபங்கு கட்டண சலுகையுடன் அரசாணை இருந்தும் ஆரணி பணிமனை கண்டக்டர்கள், டிரைவர்கள் அரசாணையை மதித்து நடக்காததை கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளை பஸ்சில் ஏற்றாமல் அவமானப்படுத்தி இழிவாகப் பேசி வருவதை கண்டித்தும் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதையடுத்து பணிமனை மேலாளர் வெங்கடேசன் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசும்போது, அரசாணை தற்போது வந்துள்ளது. இதில் டவுன் பஸ், குளிர்சாதன பஸ் தவிர மற்ற அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை ஏற்றிச் செல்லப்படும். கட்டண சலுகையும் வழங்கப்படும், தரக்குறைவாக பேசும் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் மாற்றுத் திறனாளிகளுடன் வரும் உதவியாளருக்கு இருக்கை இல்லையென்றால் வருத்தப்படாதீர்கள் என்றும் கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story