காவிரி கூக்குரல் இயக்க பயணம் கொடுமுடி வழியாக ஜக்கி வாசுதேவ் மோட்டார்சைக்கிள் பேரணி


காவிரி கூக்குரல் இயக்க பயணம் கொடுமுடி வழியாக ஜக்கி வாசுதேவ் மோட்டார்சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 14 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

காவிரி கூக்குரல் இயக்க பயணமாக ஜக்கி வாசுதேவ் கொடுமுடி வழியாக மோட்டார்சைக்கிள் பேரணி மேற்கொண்டார்.

கொடுமுடி,

காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தில் தமிழக, கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரியான கர்நாடக மாநிலம் குடகு மலை முதல் திருவாரூர் வரை மோட்டார் சைக்கிளில் பேரணி மேற்கொண்டு உள்ளார்.

அதன்படி கடந்த 3-ந்தேதி தலைக்காவிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் காவிரி கூக்குரல் இயக்க பயணம் புறப்பட்ட அவர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் வந்தார். அம்மாபேட்டை, பவானி, அந்தியூர் வழியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சென்றார். பின்னர் அங்கிருந்து பவானி லட்சுமிநகர், சித்தோடு வழியாக ஈரோடு வந்த அவர் அங்கிருந்து மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கேயம்பாளையம் நட்டாற்றீசுவரர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பயணத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அங்கிருந்து கரூருக்கு ஜக்கி வாசுதேவ் மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். கொடுமுடி அருகே சாலைப்புதூரில் வந்தபோது அவருக்கு ஈஷா யோகா மையத்தின் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் சாலையின் இருபுறங்களிலும் நின்று ‘காவேரி கூக்குரல்’ இயக்க பதாகைகள் ஏந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப்பெருமாள் கோவில் சார்பில் ஜக்கி வாசுதேவுக்கு பூரணகும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஜக்கிவாசுதேவ் அங்கிருந்து புறப்பட்டு கரூர் சென்றார். இதையொட்டி கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story