மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் திரும்பியது


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் திரும்பியது
x
தினத்தந்தி 14 Sept 2019 3:45 AM IST (Updated: 14 Sept 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் மதுரைக்கு திரும்பியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் மதுரைக்கு திரும்பியது.

பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 2-30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த பலத்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்தது.

இந்த மழை காரணமாக தூத்துக்குடியில் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

விமானம் திரும்பியது

சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று மதியம் 2-30 மணியளவில் தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 57 பயணிகள் இருந்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் விமானம் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் தரையிறங்காமல் சிறிது நேரம் வட்டமடித்தது. பின்னர் விமானம் மதுரைக்கு திரும்பி சென்றது. மழை நின்ற பிறகு மீண்டும் விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 4-20 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்த 66 பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் மாலை 4-40 மணிக்கு புறப்பட்டு சென்றது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2.45 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரல் பஜாரில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. பின்னர் வடிகாலில் மழைநீர் வடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் மதியம் சாரல் மழை சுமார் 45 நிமிடம் பெய்தது.

மழை அளவு

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

காயல்பட்டினம் - 10

விளாத்திகுளம் - 21

காடல்குடி - 14

வைப்பார் - 22

சூரங்குடி - 2

கயத்தாறு - 2

கடம்பூர் - 10

கழுகுமலை - 17

ஓட்டப்பிடாரம் - 13

மணியாச்சி - 53

கீழஅரசடி - 1

ஸ்ரீவைகுண்டம் - 4.2

தூத்துக்குடி - 0.4

Next Story