கோவில்பட்டி அருகே கார் புரோக்கர் கடத்தி செல்லப்பட்டாரா? மனைவி புகாரால் பரபரப்பு
கோவில்பட்டி அருகே கார் புரோக்கர் கடத்தி செல்லப்பட்டதாக, அவருடைய மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே கார் புரோக்கர் கடத்தி செல்லப்பட்டதாக, அவருடைய மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கார் புரோக்கர்
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 37). கார் புரோக்கரான இவர் சென்னையில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (34).
நாகராஜன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் இரவில் தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, கோவில்பட்டிக்கு வந்து விட்டதாகவும், விரைவில் வீட்டுக்கு வந்து விடுவதாகவும் கூறினார். ஆனால் நாகராஜன் வீட்டுக்கு வரவில்லை.
கடத்தலா?
இதையடுத்து மறுநாள் காலையில் செல்வி தன்னுடைய கணவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நாகராஜன், ஒருவரிடம் காரை வாங்கி ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மற்றொருவரிடம் விற்றேன். ஆனால் காரை வாங்கிய நபர் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார். இதனால் காரின் உரிமையாளர் என்னை கடத்தி வைத்து உள்ளார் என்று தெரிவித்தார். பின்னர் நாகராஜனின் செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து செல்வி அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகராஜன் கடத்தி செல்லப்பட்டாரா? அவரை கடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் புரோக்கர் கடத்தி செல்லப்பட்டதாக அவருடைய மனைவி புகார் கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story