“மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்” மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேச்சு


“மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்” மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேச்சு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 8:10 PM GMT)

“மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்“ என்று திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேசினார்.

திருச்செந்தூர், 

“மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்“ என்று திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேசினார்.

பட்டமளிப்பு விழா

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 28-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி வரவேற்று பேசி, அறிக்கை வாசித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண் கல்வி மைய இயக்குனரும், குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை தலைவருமான பியூலா சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 477 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கல்வியே பிரதானம்

உலக அளவில் ஒரு நாட்டின் உறுதித்தன்மையை கல்வி என்ற அளவுகோலை வைத்தே அளவிடுகின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கல்வியே பிரதானமாக உள்ளது. ஒரு ஆணுக்கு கல்வி கற்பித்தால், அவனுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பித்தால், ஒரு நாட்டுக்கே கல்வி கற்பிக்கிறோம் என்று ஆப்பிரிக்க பழமொழி கூறுகிறது.

நமது நாட்டில் 31½ கோடி மாணவ-மாணவிகள் உள்ளனர். இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள்தொகைக்கு சமம். இதனால் உலகளவில் நமது நாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வி ஒன்றே மனிதனின் சொத்து. கல்வி கற்ற மனிதன் சுயமாக சிந்தித்து, சான்றோனாக ஒளி வீசுகிறான். அவனது வாழ்க்கை சிறக்கிறது. கல்வி காட்டும் அனைத்து வழிகளும் நன்மையையே தருகிறது. இதுவே வாழ்க்கையின் நியதி. கல்வி நல்ல பழக்கவழக்கங்களை தருகிறது. நன்மை, தீமையை பிரித்துணர செய்கிறது.

புதிய இந்தியா

வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உடையவர்கள் எதிலும் எளிதாக வெற்றி பெற முடியும். நாம் எந்த வயதிலும், எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். நாம் எந்த செயலை தொடங்கும்போதும், எதிர்மறையாக சிந்தித்தால் அதில் வெற்றி பெறுவது கடினம். அந்த செயலில் நாம் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் தொடங்கினால் வெற்றி பெற்று விடலாம். வெற்றி பெற்றவருக்கும், தோற்றவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் தன்னம்பிக்கை மட்டும்தான். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது வெற்றிக்கு முதல் படி. மாணவர்கள் நேர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் பொழுதை போக்கும் நேரத்தை கணக்கிட்டு குறைக்க வேண்டும்.

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ந்தேதி ஊழல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பட்டம் பெறும் மாணவிகள் வாழ்வில் நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், உத்தரவாதத்துடனும் பணியாற்றி, ஊழலை ஒழிப்போம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும். மாணவிகள் நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.

இவ்வாறு பியூலா சேகர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

பின்னர் பட்டம் பெற்ற மாணவிகள், கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில், பட்டமளிப்பு விழா உறுதிமொழி ஏற்றனர்.

விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story