மாவட்ட செய்திகள்

வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது + "||" + Villivakkam in The young girl cheated Married Fake doctor arrested

வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது

வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது
வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). இவருக்கும், வேலை விஷயமாக கோவை சென்ற சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி புனித அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாய்அன்பன்(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கார்த்திக், தான் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். அதன்பிறகு இருவரும் செல்போன் மூலம் நட்பை வளர்த்தனர்.


இதற்கிடையில் தாய்அன்பன் மூலம் வில்லிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் சாஸ்திரி தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கார்த்திக் தங்கினார். தினமும் சொகுசு காரில் ஆஸ்பத்திரிக்கு செல்வதும், மாலை வீடு திரும்புவதும் என இருந்தார். தாய்அன்பன் வீட்டில் உள்ளவர்களுடனும் நெருங்கி பழகினார். அப்போது, தான் கோடீஸ்வரன் எனவும், ஆனால் தாய்-தந்தை இல்லாத அனாதை என்றும் உருக்கமாக கூறினார். இதனால் அவருடன் தாய் அன்பனின் பெற்றோர் பாசமாக பழகினர்.

தாய்அன்பனின் பெற்றோரே, அதே பகுதியை சேர்ந்த அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் ஒருவரின் மகளை கார்த்திக்கிற்கு பெண் பார்த்து பேசி முடித்தனர். கடந்த புதன்கிழமை சென்னை கொளத்தூர் குமரன்நகரில் உள்ள ஒரு கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் இரவு புழல் ரெட்டேரி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நடந்தது. திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கார்த்திக், பெண் வீட்டாரிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றதாக தெரிகிறது.

இதற்கிடையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது கார்த்திக் மீண்டும் பெண் வீட்டாரிடம் ரூ.1 லட்சம் தரும்படி கேட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், கார்த்திக்கிடம் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போதுதான் அவர், டாக்டர் இல்லை என்பதும், அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்வதாக கூறி அனைவரையும் ஏமாற்றி இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், அவருக்கு தர்மஅடி கொடுத்து மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் போலீசார் போலி டாக்டர் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் அவர், இதுபோல் வேறு எந்த பெண்ணையாவது ஏமாற்றி திருமணம் செய்து உள்ளாரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.